Tuesday 21 September 2021

மகாபாரதம் 60 லட்சம் ஸ்லோகங்கள்

மகாபாரதம் 60 லட்சம் ஸ்லோகங்கள்

மகாபாரதம் நம்மிடம் வந்த வரலாறு

இன்று நம்மிடம் உள்ள மகாபாரதக்கதை இவ்வாறாக நம்மிடம் வந்துள்ளதாக ஆன்றோர்கள் கூறுகின்றனர். 

இமயமலையில் வியாசர் கடும் தவம் செய்த போது அவருடைய சிந்தனையில் உதித்ததே மகாபாரத வரலாறு. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடு என உத்தரவிட்டார்.

பாடுகின்றவரே எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடக் கூடும் என்று எண்ணினார் வியாசர். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று சிந்தித்த போது விநாயகர் தான் அதற்கு ஏற்றவர் என வியாசர் முடிவு செய்தார்.

விநாயகரை அழைத்து மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என வேண்டினார். சம்மதம் தெரிவித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டு வியாசர் சற்று நேரம் திகைத்தார். ஒரு நொடிப் பொழுது சிந்தித்த வியாசர், பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது என எண்ணினார். “நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து தான் எழுத வேண்டும்” என மறுமொழி கூறினார் வியாசர்.

விநாயகரும் அதற்கு ஒப்புக்கொண்டு தமது கொம்பினால் மேரு மலையில் மகாபாரதத்தை எழுதலானார். வியாசர் பாடிய 60 லட்சம் ஸ்லோகங்களில் விநாயகர் எழுதும் வேகத்தை மட்டுப்படுத்த, வேண்டிய இடங்களில் கடினமான பதங்களை அமைத்து 8800 ஸ்லோகங்கள் பாடினார்.

இதற்கு என்ன பொருள் என விநாயகர் சிறிது சிந்திக்கும் வேளைக்குள் வியாசர் அடுத்த பல ஸ்லோகங்களை மனதில் ஆயத்தம் செய்து கொண்டார். 

இவ்வாறு தொடர்ந்து 3 ஆண்டு காலம் மகாபாரதம் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வியாசரால் பாடப்பட்டு விநாயக பெருமானால் எழுதப்பட்ட மகாபாரதம் 60 லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டிருந்தது. பின்னர் நாரதர் அதை தேவர்களிடம் பாடிய போது 30 லட்சம் ஸ்லோகங்களாக பாடினார். அதன் பின்னர் வசிஷ்ட மகரிஷியும், தேவல மகரிஷியும் மகாபாரதத்தை 15 லட்சம் ஸ்லோகங்களாக பித்ரு லோகத்தில் பாடி வைத்தனர். அதன் பின்னர் ரிஷி சுகதேவர், யக்ஷ்ர் மற்றும் நாகர்களுக்காக மகாபாரதத்தை பாடிய போது 14 லட்சம் ஸ்லோகங்களாக பாடினார். துவாரபரயுக முடிவில் ரிஷி வைசம்பியனர், ராஜா ஜனமேஜயன் மற்றும் பிற ரிஷிகளிடம் மகாபாரதத்தை கூறிய போது 1 லட்சம் ஸ்லோகங்களாக பாடினார். 

ஜெய் கணேஷா !!

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!!

No comments:

Post a Comment