Tuesday 17 September 2019

இறுதி இலக்கு

கடவுளே! நான் அவனுக்கு எவ்ளோ நல்லது செஞ்சிருப்பேன், அட தெய்வமே! என்னத்த செஞ்சி என்ன பலன்? கடைசில அவன் எனக்கு இப்படி பண்ணிட்டானே! என்று சிலர் வெளிப்படையாக புலம்ப கேள்வி பட்டிருப்போம். ஏன்! நம் மனம் கூட சில சமயங்களில் இவ்வாறு புலம்பியிருக்கலாம்.

ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து உதவியை செய்துவிட்டு, மற்றவர்கள் நன்றி மறந்து விட்டதாகவும், தான் செய்த செயலே மிகவும்  உத்தமமானதாகவும்   எண்ணும் நண்பர்களே, புலம்புவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.

ஆத்மா மிகவும் பரிசுத்தமானது, அதனை தீயால் எரிக்கவோ, நீரால் மூழ்கடிக்கவோ, காற்றால் அசைக்கவோ முடியாது. ஓர் ஆன்மாவிற்கு மற்ற ஆன்மாவால் அழிவும் ஏற்படாது. அப்படிப்பட்ட அழிக்க முடியாத பரிசுத்தமான ஆத்மாவை எப்படி துன்பமானது பீடிக்கிறது?

ஆன்மாவானது ஓர் உடலை பெறும்பொழுது காரியங்களை ஆற்றுகிறது மற்றும் அனுபவத்தை பெறுகிறது. ஆற்றும் காரியங்களுக்கு ஏற்ப பலன்களை பெறுகிறது. சொர்க்கம் மற்றும் நரகம் மட்டும்தான் உயிரானவன் இறந்த பிறகு ஆத்மா போய் அடையும் இலக்கு கிடையாது. செய்யும் காரியத்திற்கு ஏற்ப எதோ ஒரு உலகத்தில் பிறப்பானது நிச்சயம் அமையும். உயர் உலகத்தில் பிறந்தால் அதை சொர்க்கமாகவும், கீழான உலகத்தில் பிறந்தால் அதை நரகமாகவும் நம்முடைய புனித நூல்கள் கூறுகிறது.

உயிரற்ற உடலிடம் போய் நாம் என்ன கதறினாலும் அசையாது, அது போல் உடலற்ற ஆன்மாவை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால், அது இறைவனின் ஒரு அங்கமாகும். நாம் ஒவ்வொரு காரியம் செய்யும் பொழுதும் ஆத்மாவிற்கு நாம் ஒரு சுமையை கூட்டுகிறோம். நற்காரியங்கள் செய்யும்போது புண்ணியத்தை சுமையாகவும், தீயவற்றை செய்யும்போது பாவத்தை சுமையாகவும் ஆன்மாவிற்கு கூட்டிவிடுகிறோம். ஆற்றாத காரியங்களுக்காக ஆத்மாவிற்கு எந்த ஒரு சுமையும்  கூடுவதில்லை, ஆனால் ஆற்ற வேண்டிய காரியங்களை செய்யாதபோது மீண்டும் ஆற்றத்தவறிய காரியத்தை ஆற்றவும், அதன் பலனை சுமக்கவும் வைக்கப்படுகிறது, அது மட்டுமின்றி காரியமாற்றாது ஓடி ஒழிய வழிவகுக்காதது ஆத்மாவாகும்.

எவ்வளவு நன்மை செய்தாலும், இல்லை எவ்வளவு தீமை செய்தாலும், அதன் பலனை நாம் தான் அனுபவிக்க போகிறோமோ அன்றி, அதை பெறுபவர்கள் கிடையாது. பாவம் புண்ணியம் இவ்விரண்டு சுமைகளை தூக்கி எரிந்து, முழுமையான விழிப்பை பெரும்பொழுது நமக்கு பிறப்பிறப்பு என்னும் பந்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. அதாவது இந்த அழியக்கூடிய ஜடவுலகிளிருந்து வெளியேறவும், அழிவற்ற உலகை அடையும் அனுமதி கிடைக்கிறது. செய்த புண்ணியத்தின் பலனை அனுபவிக்க ஆசை கொள்ளும் நாம், செய்த பாவத்தின் வலிகளை ஏற்க தைரியம் கொள்வதில்லை. ஆன்ம பலம் என்ற ஒரு வார்த்தை கேள்விப் பட்டிருப்போம், அந்த பலத்தினை பெறுவதற்கு நாம் காரியத்தை ஆற்றி அதன் பலனை துறக்க வேண்டும். அதாவது என்னால் தான் இந்த காரியம் செய்யப்பட்டது என்னும் ஆணவ எண்ணத்தை விட்டொழித்து, இந்த காரியத்தை செய்ய நம்மை ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது என்னும் அடக்க எண்ணம் உருவாக வேண்டும்.

அப்படியானால் இறைவன் என்ன செய்கிறான் என்றால், நமக்கெல்லாம் அப்படிப்பட்ட அழியா உலகை அடைய வழி காட்டுகிறான். இந்த ஜடவுலகம் மிக பெரியது, அதிலிருந்து வெளியேற நமக்கு ஒருவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது, அவர்தான் பரமாத்மா. காரணம் இவையாவும் அவர் திருவுள்ளம் கொண்டு படைக்கப்பட்டதாகும். அப்படியானால் அவர் ஒரு வழிகாட்டி தானா! நாம் கேட்பதை எல்லாம் கொடுக்க வல்லவர் இல்லையா என்னும் சந்தேகமும் நம்முள் எழலாம், அதற்க்கு விடையானது, இறைவனானவர் நாம் கேட்பதை எல்லாம் கொடுக்க வல்லவர் தான், ஆனால் நம் ஆசைக்கேற்ப்ப, கேட்பதை எல்லாம் அவர் கொடுத்தால்,  சிறிய வீட்டில் அளவிற்கு அதிகமான பொருளை நிரப்பினால் தங்க எவ்வாறு சிரமமாக போகுமோ அதுபோல, நம் வாழ்வும் கிடைக்கும் தேவைக்கதிகமான பொருள் சேர்ப்பினால், அவையாவும் முழுமையாக அனுபவிக்காமல் பொருளற்றுப் போகும்.ஆனால் ஒரு உண்மையை நாம் உணர வேண்டும், நாம் மனமார ஏற்க வல்லதை, நம் வாழ்வின் சுகத்தினை, நமக்கு தேவையானதை கொடுப்பவன் இறைவனாவான்.

பலனைத் துறந்து ஆன்மாவிற்கு பாரத்தினைக் குறைத்து, இறைவனின் வழிகாட்டுதலால், நல்லுலகம் செல்லுவோமாக. இறைவனை காண மார்க்கம் இரண்டு, அது ஒன்று பக்தி மற்றொன்று அன்பு. பக்தி இல்லையேல் அன்பு நிச்சியம் உதட்டளவில் தான் இருக்கும். அன்பு ஒன்றால் இறைவனை அழைத்து பக்தி செலுத்தி வாழ்வோமாக.

No comments:

Post a Comment