Tuesday 17 September 2019

சந்திரன் சொன்ன சாட்சி

சந்திரன் சொன்ன சாட்சி 

ராசு விவசாய தொழில் செய்து வருபவன். ராசுவிற்கு சில ஏக்கர் நஞ்சை நிலங்கள் உண்டு. ராசு உழைப்பாளி கொஞ்சம் வசதிக்காரன், கொஞ்சம் இரக்க குணம் கொண்டவன். ராசுவின் மனைவி அங்கம்மா. இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் என ஒரு அழகான குடும்பம். பருவ வயதிலேயே தாய் தந்தையை இழந்த அவன் கடுமையாக உழைத்து முன்னேறி நன்னிலைக்கு வந்தவன். ராசுவின் பக்கத்து வீட்டுக்காரன் முத்து, முத்துவோ ஏழ்மை நிலையில் இருப்பவன், கொஞ்சம் சோம்பேறியும் கூட. முத்துவுக்கோ தாய், தந்தை, மனைவி மற்றும் மூன்று மகன்கள் என கொஞ்சம் பெரிய குடும்பம். ராசுவிடம் முத்து, அவன் மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தன் குடும்ப நிலையை காட்டி, அடிக்கடி கொஞ்சம் கடன் கேட்பான், முத்துவின் ஏழ்மை நிலை கண்டு மறுக்காமல் ராசுவும் கொடுத்து விடுவான்.

முத்துவுக்கோ வாங்கிய கடனை திருப்பி தரும் பழக்கமே இல்லை. ராசுவுக்கு ஒரு வருடம் நல்ல விளைச்சல் அதனால் நல்ல வருமானம் இருந்தது. இதை தெரிந்து கொண்ட முத்து, அவனிடம் புதிதாக தொழில் தொடங்க இருப்பதாக கூறி ஒரு பெரிய தொகையை கடனாக கேட்டான். ராசு சற்று தயங்க, அதை புரிந்து கொண்ட முத்து, தான் நல்ல நிலைக்கு வந்தவுடன் கண்டிப்பாக இதற்க்கு முன் வாங்கியது மற்றும் இப்பொழுது பெறப்போகும் தொகை முழுவதையும் வட்டியும் அசலுமாக ஒரு குண்டுமணி கூட குறையாமல் கொடுத்து விடுவதாக கெஞ்சினான், ராசுவோ முத்து நல்ல நிலைக்கு வரட்டுமே என்ற நல்ல எண்ணத்தில், தன்னுடைய மனைவிக்கே தெரியாமல் அவன் கேட்ட தொகையை, எந்த சாட்சியும் இல்லாமல் நம்பிக்கையின் பேரில் கடனாக கொடுத்து விட்டான். முத்து புதிதாக தொழில் தொடங்கினான்,  வீட்டில் இருந்தவர்கள் ஏது  இவ்வளவு பணம் எனக் கேட்டதற்கு யாருக்கும் தெரியாமல் வெகு நாட்களாக சேமித்து வந்ததாக ஒரு கதை சொல்லி சமாளித்து விட்டான்.

நாட்கள் நகர்ந்தன முத்து தொழிலில் கொஞ்சம் கால் ஊன்றினான். கொஞ்சம் வசதி படைத்தவனானான். பணம் சேர சேர அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச இரக்க குணமும் அவனை விட்டு போனது. அவனுக்கு ராசுவிடம் வாங்கிய கடனை திருப்பி தர மனமில்லாமல் போனது. எங்காவது போய் இவன் செத்து தொலைய மாட்டானா என நினைக்கத் தொடங்கினான். ராசுவை எங்கு கண்டாலும் கண்டும் காணாததும் போல் இருக்கத் தொடங்கினான். ஒரு நாள் முத்துவை தனியாக சந்தித்த ராசு, தான் கொடுத்த தொகையை திருப்பி தருமாறு கேட்டான். கொஞ்சம் நாள் போகட்டும் அந்த செலவு இருக்கிறது இந்த செலவு இருக்கிறது என சாக்கு சொன்னான். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு காரணம் சொல்லி ஏமாற்றி வந்தான். இதனால் பொறுமை இழந்த ராசு, ஒருநாள் முத்துவை தனியாக சந்தித்து, பஞ்சாயத்தில் சொல்ல போவதாக மிரட்ட, இரண்டே இரண்டு மாதம் கால அவகாசம் தருமாறு கெஞ்சி நாடகமாடினான். ராசுவும் ஒப்புக் கொண்டான்.

ஒரு மாதம் ஓடி விட்டது, அன்று பௌர்ணமி நாள், நிலவின் வெளிச்சமோ பட்டப் பகல் போல் ஒளி வீசி கொண்டு இருந்தது. அடுத்த நாள் ஓர் அவசர வேலையாக வெளியூர் செல்ல இருந்ததால் ராசு தன் மனைவி அங்கம்மாவிடம் தோட்டத்திற்கு சென்று இரவிலேயே தண்ணீர் பாய்த்து விட்டு வந்து விடுவதாக சொல்லி, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மொட்டை மாடியில் உறக்கம் வராமல் படுத்து இருந்த முத்து, ராசு இரவில் தனியாக தன்  தோட்டத்திற்கு செல்வதை கண்டான், யாருக்குமே தெரியாதவாறு அவனை பின் தொடர்ந்தான். தோட்டத்திற்கு சென்ற ராசு மண்வெட்டியை வயல்வரப்பின் மேல் வைத்து விட்டு, வாய்க்காலில் இறங்கி குனிந்தவாறு தோட்டத்து வாய்க்கால் மண்ணை கையால் அள்ளி கரை அனைத்து கொண்டு இருந்தான். அவன் பின்னால் சத்தமில்லாமல் வந்த முத்து அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து ராசுவின் தலையில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான். தடுமாறியபடி திரும்பிய ராசு முத்துவைக்  கண்டான், அதிர்ச்சியாலும் வலியாலும் நிலைகுழைந்த ராசு விழுந்து சரியும் பொழுது "நீ வாங்கிய கடனுக்கும், நீ செய்த இந்த செயலுக்கும் அந்த சந்திரனே சாட்சி, அந்த சந்திரனே சாட்சி" என நிலவை நோக்கி கை காட்டியவாரே உயிரை விட்டு விட்டான்.

அங்கம்மாவோ, கணவன் சீக்கிரம் வருவான் என காத்திருந்தவள் களைப்பில் சற்று கண்ணயர்ந்தாள், கண் விழித்து பார்க்கையில் விடிந்து இருந்தது, என்ன இன்னும் இந்த ஆளை காணோம் என வீடு முழுவது தேடியவள், மனம் பொறுக்காமல் தோட்டத்திற்கு போனால். அங்கு அவள் கணவனை பிணமாக கண்டாள், அதிர்ச்சியில் கதறத் தொடங்கினாள். சத்தம் கேட்ட ஊரார் எல்லோரும் கூடி விட்டனர்,அங்கு ஒன்னும் தெரியாதவன் போல் வந்த முத்துவும் பேருக்கு தலையை காட்டி விட்டு நீலி கண்ணீர் வடித்துவிட்டு சென்றுவிட்டான். காவலர்களும் வந்தனர் விசாரணையும் நடத்தினர், என்ன முயற்சித்தும் யாருக்கும் எந்த ஒரு துப்பும் எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் போனது.

காலங்கள் நகர்ந்தது. ஊர் மக்களும் ராசுவை மறந்தனர். ராசுவின் கொலை வழக்கும் நீர்த்துப் போனது. மீண்டும் ஒரு பௌர்ணமி தினம், மொட்டை மாடியில் மனைவியோடு உறங்கி கொண்டு இருந்தான் முத்து. முத்துவின் மனைவி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். முத்துவிற்கும் திடீரென்று தூக்கம் கலைந்து விட்டது. கண் விழித்த போது முகத்திற்கு நேராக முழு நிலவினைக் கண்டான். சற்று நேரம் நிலவைக் பார்த்துக்கொண்டிருந்த முத்து, "இந்த சந்திரன் தான் வந்து சாட்சி சொல்ல போகிறானா" என்று லேசாக முனுமுணத்தவாறு ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான். தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த முத்துவின் மனைவி என்ன சந்திரன்! என்ன சாட்சி! என கேட்க அதிர்ந்து போன முத்து ஒன்னும் இல்லை என சமாளிக்க முயன்றான். ஏதேதோ சொல்லி பார்த்தான் அவள் நம்புவதாக இல்லை. இறுதியாக அவளிடம் உயிரே போனாலும் வெளியே சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டான். அவனுடைய மனைவியும் தப்பித்தவரியும் ரகசியம் கசியாமல் பார்த்துக்கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.   ஒருநாள் முத்துவின் மூத்த  மகனிடம், முத்து கொஞ்சம் பணம் கொடுத்து வங்கியில் செலுத்தி விட்டு வர சொன்னான். வங்கிக்கு சென்ற முத்துவின் மகன் வழியில் பணத்தை தொலைத்து விட்டான். வீட்டிற்க்கு வந்து முத்துவிடம் பணம் தொலைந்ததை சொல்ல கோபத்தின் உச்சிக்கே போனான் முத்து. மகனை  போட்டு அடித்து துவைக்க ஆரம்பித்தான், பதைபதைத்த முத்துவின் மனைவி ஓடி வந்து தடுத்தாள் அவளையும் அடிக்க ஆரம்பித்தான். வீட்டிற்குள் இருந்து வந்த இரைச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் முத்துவின் வீட்டிற்கு வெளியில் கூடி விட்டனர். ஒருகட்டத்தில் முத்துவின் அடியின் வலி தாங்க முடியாத முத்துவின் மனைவியோ "ராச அடிச்சி கொன்ன மாதிரியே என்னையும் அடிச்சி கொல்றானே..." என கத்தி ஓலமிட்டாள். அவள் வாயை ஓடி சென்று பொத்தினான், அனால் இரண்டு கரங்களால் ஊரார் அனைவரின் கதையும் பொடித்த முடியுமா. அவ்வளவுதான் உண்மை ஊருக்கு அம்பலமானது. முத்து காவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டான், விசாரணையில் உண்மை அனைத்தும் வெளிவந்தது. பின்னர் நீதிமன்றத் தீர்ப்பால் ஆயுள் கைதியானான்.

ஆம் உண்மையில் சந்திரன் நேரில் வந்து சாட்சி சொல்லவில்லை,
ஆனால் சந்திரனே சந்தர்ப்பமாக வந்து சாட்சியும் சொன்னான்.

No comments:

Post a Comment